மோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு

selvi_2201712e

மோசடி வழக்கிலிருந்து திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, வி.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவில், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் வி.எம்.ஜோதிமணி ஆகியோர், சென்னைக்கு அருகேயுள்ள தாழம்பூர் கிராமத்தில் ரூ. 5.14 கோடி மதிப்புள்ள 2.94 ஏக்கர் நிலத்தை விற்பதாகக் கூறினர்.

ரூ. 3.5 கோடியை முன்பணமாகப் பெற்றுவிட்டு, நிலத்தை விற்கவும் இல்லை, முன்பணத்தை திருப்பித் தரவும் இல்லை. திரும்பக் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. பூந்தமல்லி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை கடந்த 2015-இல் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதங்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று பூந்தமல்லி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், தன் மீது தவறாகப் பதிவு செய்ய வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செல்வி தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி முதலாவது நீதித் துறை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், வழக்கில் இருந்து செல்வியை விடுவிக்க உத்தரவிட்டார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.