பிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி?

pranav

மும்பையை அடுத்த கல்யாணில் நடந்த பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் (16 வயதுக்குட்பட்டோர்) கே.சி.காந்தி மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரணவ் தனவாடே 1,009 ரன்கள் (323 பந்து, 129 பவுண்டரி, 59 சிக்சர்) குவித்து உலக சாதனை படைத்தார். அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு நடத்திய கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் ஆயிரம் ரன்கள் சேகரித்த முதல் வீரர் இவர் தான். ஆட்டோ டிரைவரின் மகனான 15 வயதான பிரணவ் தனவாடேவுக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டு இருக்கின்றன.

ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது கையெழுத்து போட்ட பேட்டை பரிசாக அனுப்பி இருக்கிறார். இந்த நிலையில் சாதனைக்குரிய நாளில் என்னென்ன நடந்தது என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

* மனம் தளராமல் ரன்வேட்டை நடத்தினாலும், பிரணவுக்கு அதிர்ஷ்டமும் துணை இருந்துள்ளது. மொத்தம் 21 கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்திருக்கிறார்.

* ‘ஸ்கொயர் லெக்’ எல்லைக்கோடு தூரம் வெறும் 30 யார்டு (27½ மீட்டர்) மட்டுமே இருந்தது. வழக்கமாக சர்வதேச போட்டியில் பவுண்டரி தூரம் குறைந்தது 59.43 மீட்டர் தூரம் இருக்க வேண்டும்.

* எல்லாவற்றுக்கும் மேலாக எதிரணியான ஆர்யா குருகுல் அணி (முதல் இன்னிங்சில் 31 ரன், 2-வது இன்னிங்சில் 72 ரன்) மிகவும் பலவீனமாக இருந்துள்ளது. 16 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பதிலாக 12 வயது அணியினரை களம் இறக்கி இருக்கிறார்கள். ஆர்யா குருகுல் அணியின் பயிற்சியாளர் யோகேஷ் ஜக்தாப் கூறும் போது, ‘எங்களது பிரதான 6 வீரர்கள் பரீட்சை காரணமாக கடைசி நேரத்தில் விலகி விட்டனர். இதே போல் மேலும் 9 முன்னணி வீரர்களும் விலக நேரிட்டது. போட்டியில் இருந்து விலகினால் அடுத்த ஆண்டு தடை விதிக்க நேரிடலாம். இதனால் தான் வேறு வழியின்றி 12 வயதினர் அணியை இறக்கினோம்’ என்றார்.

* அனுபவம் இல்லாத ஆர்யா குருகுல் அணியில் பெரும்பாலானோர் டென்னிஸ் பந்தில் மட்டுமே விளையாடி பழக்கப்பட்டவர்கள். இதனால் களத்தில் கடினமான பந்து (லெதர் பந்து) தாக்கி காயம் ஏற்பட்டு விடுமோ? என்று பயந்தே விளையாடி இருக்கிறார்கள். ஒரு பவுலர் 6 ஓவரில் 142 ரன்களை வாரி வழங்கியிருக்கிறார்.

* இவற்றை எல்லாம் ஆராய்ந்த சில கிரிக்கெட் நிபுணர்கள், பிரணவ் தனவாடேவின் இமாலய ரன் குவிப்பை சிறப்பு வாய்ந்ததாக கருத முடியாது என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் பிரணவின் பயிற்சியாளர் ஷர்மா ‘இதற்கு முன்பு இந்த மைதானத்தில் நிறைய ஆட்டங்கள் நடந்துள்ளன. அப்போது யாரும் இது போன்று ரன் குவிக்கவில்லையே? இதே போன்ற பந்து வீச்சு தாக்குதலில் யாராவது இங்கு 300 ரன்கள் அடிக்க முடியுமா? ’ என்று சவால் விடுத்துள்ளார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.