குண்டர் சட்டத்தில் விஜயகாந்தை கைது செய்ய வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் மனு

images (11)

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கூறி அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று அ.தி.மு.க. பிரமுகர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் ஏ.ஜெயராம், வக்கீல். அ.தி.மு.க. பிரமுகரான இவர், ‘அம்மா’ இலவச சட்ட உதவி மையம் என்று ஒரு மையத்தை ஏற்படுத்தி அதன் செயலாளராகவும் இருந்து வருகிறார். மதுரை ஐகோர்ட்டு கிளையில் இவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீபகாலமாக பொது அமைதி பாதிக்கும் வகையில் நடந்து கொள்கிறார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயத்தையும், அச்சத்தையும் உருவாக்கி வருகிறார். இவரது நடவடிக்கையால் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்து வருகிறது.

விஜயகாந்த் மீது தமிழகத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை ஆகும். பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் அவர் தொடர்ந்து நடந்து கொள்கிறார்.

சாதாரண குற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதன் மூலம் அவரது செயல்பாட்டை தடுக்க முடியாது. எனவே, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்பொருட்டு அவரை குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர், தஞ்சாவூர் கலெக்டர் ஆகியோருக்கு மனு அனுப்பினேன். அவர்கள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, நான் கொடுத்த மனுவை பரிசீலித்து விஜயகாந்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.