வாட்ஸ்-அப் விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார் முதல்வர்: ராமதாஸ்

Tamil-Daily-News_67018854619

தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா என்று பா.ம.க நிறுவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையை வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் தாக்கிய போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முன்வராத முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யும், தேனும் கலந்து தயாரிக்கப்பட்ட ஓர் உரையை ‘வாட்ஸ்-அப்’பில் படித்தார். உண்மையை குழிதோண்டி புதைத்து விட்டு, அரசியல் லாபம் தேடும் ஒற்றை நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட அந்த உரை இப்போது செல்பேசி மற்றும் தரைவழி தொலைபேசிகள் மூலம் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

முதல்வரின் உரை தொடக்கத்தில் வாட்ஸ் அப் மூலம் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களாக தொலைபேசி அழைப்பு மணி திடீரென ஒலிக்கிறது. எவரேனும் முக்கியமான நண்பர்கள் அழைக்கிறார்களோ என்ற எண்ணத்தில் எடுத்தால், ‘‘வணக்கம், உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்’’ எனத் தொடங்கி ஜெயலலிதாவின் முழு உரையும் ஒலிக்கிறது. தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி தான் என்ற போதிலும் பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்பேசி பயன்படுத்துவதால் கிட்டத்தட்ட 10 கோடி செல்பேசி இணைப்புகள் தமிழகத்தில் உள்ளன. இவை தவிர 2 கோடிக்கும் அதிகமான தரை வழி தொலைபேசி இணைப்புகளும் உள்ளன. இந்த அனைத்து தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கும் குறைந்தது 5 முறையாவது முதல்வர் ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரை சென்றடைய வேண்டும் என்று அரசுத் தரப்பில் ஆணையிடப்பட்டிருப்பதால் அடிக்கடி தொலைபேசியில் ‘உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா’ அழைத்து பொதுமக்களை எரிச்சலூட்டுகிறார்.

முதல்வர் ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரை பிரச்சாரத்தை தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை தான் மேற்கொண்டு வருகிறது. நோய்டாவில் உள்ள அழைப்பு மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சாரத்திற்கு மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமான தொகை செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் பணியாகும். ஆனால், முதல்வரின் வாட்ஸ்-அப் உரையில் என்ன திட்டம் அல்லது பயனுள்ள தகவல் இருப்பதாக எண்ணி அதை மக்களிடம் கொண்டு செல்ல கோடிக்கணக்கில் வரிப்பணத்தை அரசு செலவிடுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

அ.தி.மு.க.வின் அருவறுக்கத்தக்க இந்த அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஊடகங்களை கையில் வைத்துக் கொண்டு உண்மைகளை மூடி மறைத்தாலும், அவை தடைகளை உடைத்துக் கொண்டு வெளியே வரும் காலம் வந்து விட்டது. இதற்கெல்லாம் காரணமான முதல்வர் ஜெயலலிதாவை வரும் தேர்தலில் வீழ்த்தி தமிழகத்தை மக்கள் மீட்டெடுப்பது உறுதி என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.