சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிபத்து

images (10)

ஆசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு தினமும் 10 ஆயிரம் புற நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். 3 ஆயிரத்திற்கும் மேலான நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கு தங்கி சிகிச்சை பெறுகிறார்கள்.

அனைத்து துறைகளிலும் சிறந்த டாக்டர்களும், நவீன மருத்துவ உபகரணங்களும் பயன்படுத்தப்படுவதால் நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை பெருகி வருகிறது. இங்குள்ள பல்வேறு மருத்துவ தீவிர சிகிச்சை பிரிவிலும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இந்த நிலையில் 1–வது டவர் பிளாக்கில் உள்ள முதல் தளத்தில் சர்ஜிக்கல் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆக்சிஜன் மானிட்டருக்கான மின் வயர் தீப்பிடித்து எரிந்து புகை வந்ததால் நோயாளிகள் அலறினார்கள். அங்கு பணியில் இருந்த நர்சுகள் உடனடியாக ஓடி வந்து பார்த்தனர். மேலும் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தனர். மேலும் ஆஸ்பத்திரியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

இதற்கிடையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் 16 பேரையும் வேறு பிரிவுகளுக்கு ஒவ்வொருவராக கொண்டு செல்லப்பட்டனர். தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் விரைந்து வந்து தீயணைப்பு படை வீரர்களும் தீ தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

நிலைய அதிகாரி காமராஜ் தலைமையில் 2 வண்டியில் வந்த வீரர்கள் பெரும் தீ விபத்தை தவிர்த்தனர். தீ விபத்து ஏற்பட்ட 10 நிமிடத்தில் தீ முற்றிலும் பரவவிடாமல் தடுக்கப்பட்டதால் பெரும் விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முதலில் அரசு ஆஸ்பத்திரி முதல்வர் விமலா விரைந்து வந்தார். அவர் நோயாளிகள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுத்தார். பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு பொது மருத்துவமனையின் சர்ஜிக்கல் தீவிர சிகிச்சை பிரிவில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் ஒரு படுக்கை பிரிவு பகுதியில் ஏற்பட்ட மின்கசிவு உடனடியாக கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

உடனடியாக அங்கு சிகிச்சை பெற்ற 16 நோயாளிகள் பாதுகாப்பாக 4 தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டன. மருத்துவமனை டீன் விமலா மூத்த மருத்துவர்கள் ரகுநாத், நாராயணசாமி, கீதா உள்ளிட்ட பலர் நோயாளிகளை தீ விபத்து ஏற்பட்ட வார்டில் இருந்து பத்திரமாக மீட்டு வேறு வார்டுகளுக்கு மாற்றம் செய்ய உதவினார்கள்.

தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

டீன் விமலா கூறும் போது, தீவிர சிகிச்சை பிரிவில் இன்று அதிகலையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பொறி உண்டானதை நர்சு ஒருவர் கண்டு பிடித்தார். இதனால் அங்கு இருந்த நோயாளிகள் அனைவரையும் வேறு வார்டுகளுக்கு உடனடியாக மாற்றி விட்டோம்.

பின்னர் மின் கசிவு ஏற்பட்ட பகுதியில் அதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுத்ததால் பேராபத்து தடுக்கப்பட்டது. ஆஸ்பத்திரி ஊழியர்கள், டாக்டர்கள் சரியான நேரத்தில் விரைவாக செயல்பட்டதால் நோயாளிகள் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர் என்றார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.