நமக்கு நாமே பயணம் ஜெ. விடமும் பாதிப்பை ஏற்படுத்தியது- ஸ்டாலின்

Tamil_News_large_135032220150925235157

தனது நமக்கு நாமே பயணம் பொதுமக்களிடம் மட்டுமல்லாது முதல்வர் ஜெயலலிதாவிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் புத்தாண்டு பல்வேறு துயரங்களில் இருந்து மக்களுக்கு விடுதலை பெற்று தரும் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் நான் மேற்கொண்ட நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

சட்டப்பேரவை தொகுதி வாரி யாக கட்சி சார்பில்லாமல் பல்வேறு தரப்பு மக்களுடன் நான் நேரடியாக கலந்துரையாடியது தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியதிலிருந்து நமக்கு நாமே பயணம் அவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது தெரிகிறது. இதனை வரவேற்கிறேன்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அதிமுகவுக்கு எதிரிகளே இல்லை என பேசி வந்த ஜெயலலிதா, தேர்தல் கூட்டணி குறித்து சூழ்நிலைக்கேற்ப முடி வெடுப்பேன் என தெரிவித்துள் ளார். இது அதிமுகவின் வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.

மழையால் தடைபட்ட நமக்கு நாமே பயணத்தை இந்த வாரம் தொடங்கி பிப்ரவரி மாத இறுதியில் நிறைவு செய்ய இருக்கிறேன். இந்தப் பயணத்தின்போது 22 சட்டப்பேரவை தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து உரையாடவுள்ளேன்.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து இதுவரை மவுனம் சாதித்து வந்த ஜெயலலிதா, அதிமுக பொதுக்குழுவில் சில விளக்கங்களை அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்த அவர் முன்வர வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கிடைக்காவிட்டால் திமுக போராட்டம் நடத்தும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.