திமுகவிடமிருந்து ஜனநாயகத்தை காப்பாற்ற தொண்டர்கள் பணியாற்றவேண்டும்

images (4)

திமுகவிடமிருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற கழகத் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என அறைகூவல் விடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. முதலில் செயற்குழுவும், அதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டமும் நடந்தது.

கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என 2,800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் அரசியல் – தேர்தல் சார்ந்த சில முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:

1. ‘திமுகவிடம் ஜனநாயகத்தை காப்பாற்றுக’

திமுகவிடமிருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என அறைகூவல் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத் தீர்மானத்தில், “தமிழ் நாட்டில் அரசியல் நாகரீகத்தை சீர்குலைத்ததிலும், தனி மனிதத் துதியை வளர்த்ததிலும், ஒரே குடும்பத்தினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலத்தின் இயற்கை வளங்கள் மற்றும் நிதி ஆதாரங்களை சுரண்டுவதிலும் தீய சக்தியின் தலைமையிலான திமுக-வின் பங்கு நூறு சதவீதமானது.

இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது அது குறித்த உண்மை நிலவரங்கள் மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, 2 மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்திய கட்சி தீய சக்தியின் திமுக கட்சி.

மத்திய அரசில் வலிமையான இடத்தைப் பெற்றிருந்த போதிலும் ஈழத் தமிழர்களை காப்பதற்கு அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தாமல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற, உலக வரலாறு கண்டிராத ஒரு மாபெரும் ஊழலின் மூலம் இந்திய நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் தீராப் பழியை ஏற்படுத்திய கட்சி தீய சக்தியின் திமுக கட்சி.

எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும், மீண்டும் மாநிலத்தையும், தேசத்தையும் சுரண்டி செல்வத்தைக் குவிக்கலாம் என்று நேரம் பார்த்து திமுக காத்திருக்கிறது.

மக்களுக்கு ஏதேனும் இடர்ப்பாடு வந்துவிடாதா? அதன் மூலம் தங்களுடைய பாவச் செயல்களை எல்லாம் மக்கள் மறந்துவிட வழி ஏற்பட்டுவிடாதா? மீண்டும் அராஜக ஆட்சி ஒன்றை ஏற்படுத்தி தங்களது பெட்டகங்களை நிரப்பிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துவிடாதா? என்று எதிர்பார்த்து, தீய சக்தி திமுக-வின் பல்வேறு நச்சுக் கிளைகள் தொடர்ந்து முயற்சித்து வருவதை விழிப்புடன் கண்காணித்து, தமிழ் நாட்டில் ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பாராட்டு

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2014 – நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புதிய சரித்திரச் சாதனை படைத்ததாக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. ஜெயலலிதாவுக்கே முழு அதிகாரம்!

2016 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக வெற்றியை உறுதி செய்திட பொதுச் செயலாளர் வழிகாட்டுதலின்படி கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் களப் பணியாற்றிட சூளுரை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. பிறந்தநாள், புத்தாண்டு வாழ்த்து

கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் கொள்கை வழி நின்று, தமிழ் நாட்டின் வளமும், வளர்ச்சியும் தமது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு பொதுச் செயலாளர் ஜெயலலிதா அல்லும் பகலும் அயராது உழைத்து வருவதாக குறிப்பிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தும், புத்தாண்டு வணக்கமும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடையவை
சட்டப்பேரவைத் தேர்தலில் சூழலுக்கு ஏற்ப வியூகம் அமைத்து முடிவு எடுப்பேன்: அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா பேச்சு
‘அல்லும் பகலும் வெள்ள நிவாரணப் பணிகள்’- அதிமுகவின் 14-ல் 8 தீர்மானங்களில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு!
வெள்ள இழப்பீடு, ஜல்லிக்கட்டு, மீனவர் பிரச்சினை: ஜெயலலிதா கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மத்திய அரசுக்கு அதிமுக வலியுறுத்தல்

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.