மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை

download (4)

போலீஸ் நிலைய வளாகத்தில் பெண் சப்–இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஹேமலதா (வயது 44). இவருக்கும், அசோக்குமார் என்பவருக்கும் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 15 வயதில் மகன் உள்ளார். கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஹேமலதா கணவரிடம் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். பின்னர் போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றிய பாலசந்தர் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்திவந்தார்.

அன்னூர் அருகே நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. அங்கு ஹேமலதா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த பணி முடிந்ததும் இரவு 8 மணிக்கு போலீஸ் நிலையம் சென்றார். பின்னர் அவர், போலீஸ் நிலைய வளாகத்தில் இருக்கும் பழைய போலீஸ் நிலைய கட்டிடத்துக்கு சென்றார்.

சிறிது நேரத்தில் போலீஸ் நிலையத்துக்கு வந்த அவர் திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே சக போலீஸ்காரர்கள் ஓடிச்சென்று அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தபோது லேசாக நினைவு வந்த ஹேமலதா, அவர்களிடம் தான் விஷம் குடித்துவிட்டதாக கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஹேமலதா கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஹேமலதா துடியலூர் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது அந்தப்பகுதியை சேர்ந்த பாலசந்தர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் கணவன்–மனைவி போன்று வசித்துவந்தனர். பாலசந்தர் ஹேமலதாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததால், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது பாலசந்தர், ஹேமலதாவை அடித்து உதைத்ததுடன், தரக்குறைவாக திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த ஹேமலதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருடைய சாவுக்கு காரணமாக இருந்த பாலசந்தர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஹேமலதா தங்கியிருந்த வீட்டில் இருந்து ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டு உள்ளது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.