பொது இடங்களில் அநாகரிகமாக நடக்கும் விஜயகாந்த்

07-1433658329-vijayakanth-53-600

பொது இடங்களில், தரங்கெட்டு நடக்கும் விஜயகாந்தின் அநாகரிகம் தொடர்வது, தமிழக அரசியல் வட்டாரங்கள், பத்திரிகை வட்டாரங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது, தன் கட்சி நிகழ்ச்சிகளில் கட்சி பிரமுகர்களை, எம்.எல்.ஏ.,க்களை, தொண்டர்களை பலர் முன்னிலையில் அடித்து, துவைப்பது, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் வாடிக்கையாக உள்ளது.அந்த வரிசையில் நேற்று, பத்திரிகையாளர்களை காரித் துப்பி அசிங்கப்படுத்தி உள்ளார் விஜயகாந்த். இது பலதரப்பினரையும் கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை, அடையாறு, மத்திய கைலாஷ் பகுதியில் நேற்று நடந்த, விஜயகாந்த் கட்சியின் ரத்த தான முகாமுக்கு வந்திருந்த அவர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர், ‘2016ல் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்குமா?’ என, கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜயகாந்த், ”அ.தி.முக., ஆட்சியை பிடிக்காது. இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமா? உங்களுக்கு அந்த தைரியம் இருக்கா?” என கூறியவர், திடுமென, பத்திரிகையாளர்களை நோக்கி காரித் துப்பினார்.

இதனால், அங்கு கூடிய நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது தொடர்பாக, விஜயகாந்திடம் விளக்கம் கேட்க, பதில் எதுவும் கூறாமல், அங்கிருந்து அலட்சியமாக புறப்பட்டு சென்று விட்டார் அவர்.இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சங்கங்கள் விஜயகாந்தின் செயலை கண்டித்து, அறிக்கை விட்டுள்ளன. அடுத்த கட்டமாக, விஜயகாந்த் வீட்டு முன் போராட்டம் நடத்தவும் பத்திரிகையாளர் சங்கங்கள் தயாராகி வருகின்றன.

இது குறித்து சமூக ஆர்வலர் கண்ணன் கூறியதாவது: கடந்த, 2011 தேர்தலின் போது, தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் வேட்பாளர் பாஸ்கரை, தேர்தல் பிரசாரத்தின் போது, வேனில் வைத்து அடித்து, உதைத்தார். ஒரு

மாதத்துக்கு முன், ரிஷிவந்தியம் தொகுதிக்கு சென்றிருந்த விஜயகாந்த், நிவாரணப் பொருட்களை வாங்க வந்திருந்த மக்கள் மத்தியில், அக்கட்சியின் பண்ருட்டி, எம்.எல்.ஏ.,வான சிவக்கொழுந்தை அடித்து, நொறுக்கினார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பிரதமரை சந்திக்க டில்லி சென்ற விஜயகாந்த், பிரதமரை சந்தித்துவிட்டு, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய போது, கேள்வி எழுப்பிய, ‘ஜெயா’ டிவி நிருபரை அடிக்கப் பாய்ந்தார். ஒவ்வொரு முறை வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கூடி, கேள்வி கேட்கும் போதெல்லாம், அவர்களை நோக்கி, நாக்கை துருத்தி, அடிக்கப் பாய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஜெயா டிவி நிருபரை அடிக்கப் பாய்ந்ததாக, அவர் மீதும், கட்சி எம்.எல்.ஏ.,வான அனகை முருகேசன் மீதும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.அது போல, மற்ற கட்சித் தலைவர்களை, கட்சி மேடைகள், பத்திரிகையாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட பொது இடங்களில் நாகரிகக் குறைவாக பேசுவதை, விஜயகாந்த் வாடிக்கையாக்கி கொண்டுள்ளார்.

இப்படி அவர் பேசிய பேச்சுகளுக்காக மட்டும் ஜெயலலிதா தரப்பில் பல அவதுாறு வழக்குகள் அவர் மீதும், அவர் மனைவி பிரேமலதா மீதும் போடப்பட்டுள்ளது.தன்னை, முதல்வர் வேட்பாளராகவும், தமிழகத்தின் அடுத்த முதல்வராகவும் நினைத்து அரசியல் செய்து வரும் ஒரு கட்சியின் தலைவரான விஜயகாந்த், இப்படி கீழ்த்தரமான காரியங்களை எத்தனை நாளைக்கு தொடருவார்?இந்த நிலையிலாவது இதற்கு முடிவு கட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.