நைஜீரியாவில் எரிவாயுக் கிடங்கு வெடித்தது

நைஜீரியாவின் தெற்கே பியுடேன் எரிவாயுக் கிடங்கு ஒன்று வெடித்ததில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த விபத்து அனம்ப்ரா என்ற மாநிலத்திலுள்ள இன்னெவி என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. மேலும் ஐந்து மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர்தான் தீ அணைக்கப்பட்டுள்ளது. கிடங்கில் உயிரிழந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களது சடலங்கள் உருத்தெரியாமல் கருகிப்போயுள்ளதாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று இன்னும் தெரியவில்லை என்றாலும், கிடங்கில் பணியாற்றியவர்கள் எவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் எரிவாயு வாங்கிச் செல்வதற்காக வாடிக்கையாளர்கள் பலர் இந்தக் கிடங்கிற்கு வந்திருந்தனர். எரிவாயு சுமந்து வந்த வாகனம் ஒன்று அதனை இறக்கிவைத்த பின்னர் வெடித்ததுதான் அந்தக் கிடங்கு தீப்பிடிக்கக் காரணம் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.