தவறு செய்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள் – சிம்புவின் தாயார் அழுகை

p38a(1)

தமிழகத்தில், மழை, வெள்ள பாதிப்பு பேச்சை ஓரங்கட்டும் அளவுக்கு, நடிகர் சிம்பு – இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி உருவாக்கியதாகக் கூறப்படும், பீப் பாடல் விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்த விவகாரத்தில் சிம்பு மற்றும் அனிருத் மீது வழக்குகள் பாய்ந்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சிம்பு மனு செய்துள்ளார், இந்த மனு மீதான விசாரணை ஜன.4ம் தேதி நடக்க உள்ளது.

கோவை போலீசார் சார்பில் சிம்பு மற்றும் அனிருத்திற்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அனிருத் கனடாவில் இருக்கிறார். சிம்பு, நேற்று முன்தினம் இரவு முதல், தலைமறைவாகி விட்டார். அவரை தேடி பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் இந்த விவகாரம் குறித்து வீடியோ பதிவில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

உஷா ராஜேந்தர் பேட்டி:

சின்ன வயதில் இருந்தே என் மகன் நடித்து வருகிறார். சின்ன வயதில் அவரது திறமையை பார்த்து தான் சினிமாவில் நடிக்க வைத்தோம். சிம்பு சின்ன பையன், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, வீட்டில் நண்பர்களுடன் விளையாட்டாக உருவாக்கிய பாடல் அது, அதுவும் ஒரு பீப் போட்டு தான் பாடல் உருவாக்கப்பட்டது, பின்னர் அந்த பாடல் வேண்டாம் என்று தூக்கிப்போட்டுவிட்டார். சிம்புவுக்கு வேண்டாதவர்கள் அந்த பாடலை திருடி இணையதளத்தில் வெளியிட்டுவிட்டார்கள்.

இந்த விவகாரத்தில் தாய்மார்களின் மனது காயப்பட்டிருந்தால், அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். இந்தப் பாடலை திருடி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளோம்,

இதுவரை அவர்கள் கண்டுபிடித்து தரவில்லை. ஆனால் சிம்பு மீது மட்டும் சென்னை, கோவையில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். புகார் கொடுத்த நாள் முதல் தினமும் வீட்டு வாசல் முன்பு 24 மணி நேரமும் வீட்டின் முன்பு கேமிரா கையுமாக ஆட்கள் இருந்தால் எங்களுக்கு என்ன நிம்மதி இருக்கிறது?

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மக்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு போய் உதவுங்கள். அதைவிட இந்த பாடல் விஷயம் பெரியதா? சிம்பு அப்படி என்ன குற்றம் பண்ணி விட்டார்? பொது நிகழ்ச்சியிலோ படங்களில, பேட்டியிலோ ஏதாவது சொல்லியிருக்கிறாரா?

சிம்பு, சின்ன வயதில் இருந்தே நடிக்கிறார். அவர் வளர்ச்சியை சினிமாவில் இருக்கும் சக நடிகர்களே தடுக்கிறார்கள்.

வாலு படத்திற்கு எவ்வளவு பிரச்னை வந்தது, அதை எவ்வளவு கஷ்டப்பட்டு ரிலீஸ் செய்தோம் என்று அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து அவரது படங்களை ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கிறார்கள். சினிமாவில் போட்டி இருக்க வேண்டியது தான், ஆனால் அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சிம்புவிற்கு தொடர்ந்து கெட்ட பெயர் விளைவிக்க வேண்டும் என்று அவரை டார்க்கெட் செய்கிறார்கள்.

சொந்த வீட்டின் வாசலில் என்னால் கோலம் போட முடியவில்லை, அவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். போலீஸ் தேடும் அளவுக்கு சிம்பு என்ன தவறு பண்ணினார், அப்படியே தேடினாலும் தமிழ்நாட்டை விட்டோ, இந்தியா விட்டோ எங்கேயும் ஓடவில்லை. உங்களுக்கு என் பையன் தானே வேண்டும், எந்த போலீஸிடம் வேண்டுமானாலும் ஒப்படைக்கிறோம். எடுத்துக் கொள்ளுங்கள்.

என்ன நாடு இது? தனிப்பட்ட வீட்டிற்குள் தனியுரிமை இல்லை என்றால் ஏன் இங்கு இருக்க வேண்டும். எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை யாருமே சொல்லமாட்டேன் என்கிறார்கள். இது திருடப்பட்ட ஒரு பாடல், தூக்கி எறியப்பட்ட ஒரு பாடல், ‘பீப்’ சத்தம் போட்டு மறைக்கப்பட்ட ஒரு பாடல். அப்படியிருக்கும் போது உங்களுக்கு என்ன தான் வேண்டும். என் பையனோட உயிர் வேண்டுமா? எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அந்த பையனை வளர்த்த என்னோட உயிர் வேண்டுமா? எடுத்துக் கொள்ளுங்கள். என்ன தான் பிரச்சினை உங்களுக்கு?

சிலம்பரசனை தூக்கில் போட வேண்டும் என்கிறார்கள். அந்த பையன் தூக்கில் போடும் அளவுக்கு என்னங்க பண்ணிட்டான். அந்த பையனை வளர்ந்தவள் நான். என் மகன் தவறு பண்ணியிருந்தால், என்னை தூக்கில் போடுங்கள். நான் வருகிறேன்.

வீட்டில் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை, வெளியே வர முடியவில்லை. எந்தொரு நேரம் பார்த்தாலும் கேமிரா கையுமாகவே நிற்கிறார்கள். என்னங்க நாடு இது? எனக்கு இந்த தமிழ்நாடே வேண்டாம். எங்களை விட்டுவிடுங்கள் நாங்கள் எங்கேயாவது சென்று விடுகிறோம். கர்நாடகா, கேரளா எங்கேயாவது போய் எங்களது பொழப்பைத் தேடிக் கொள்கிறோம். எங்களை வாழவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.