மகள் காதலனுடன் மாயமானதால் அவமானத்தில் குடும்பத்துடன் மரணம்

images

வாணியம்பாடி அருகே, திருமணமான மூத்த மகள் வேறு ஒருவருடன் ஓடி விட்டதால், அவமானம் அடைந்த பெறோர், தன், இரு மகள்களை கொலை செய்து விட்டு, தாங்களும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கத்தாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 45; விவசாயி. இவர் மனைவி விஜயலட்சுமி, 40. இவர்களது மகள்கள் ஸ்ரீநித்யா, 24, நவீனா, 22, நிவேதா, 17, அனிதா, 12. இதில் ஸ்ரீநித்யாவுக்கும், அவரத தாய்மாமன் பாலச்சந்திரனுக்கும், கடந்தாண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதனால், ஸ்ரீநித்யா அடிக்கடி தன் தாய் வீட்டுக்கு வந்து விடுவார். இரண்டாவது மகள் நவீனா, பாபு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சில நாட்களிலேயே கணவரை விட்டுப் பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வந்தார். நிவேதா அங்குள்ள அரசு பள்ளியில், பிளஸ் 2 வகுப்பும், அனிதா, 7 ம் வகுப்பும் படித்து வந்தனர்.

ஓட்டம்: இந்நிலையில், வாணியம்பாடி மருதகேசரி ஜெயின் கல்லூரியில், நேற்று முன் தினம் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள தன்னுடன் வரும்படி ஸ்ரீநித்யா, அவரது கணவர் பாலச்சந்திரனை அழைத்த போது, அவர் வர மறுத்து விட்டார். பின்னர் பலவந்தப்படுத்தி கணவரை அழைத்துச் சென்று, விழாவில் பங்கேற்று, தாலிக்கு தங்கம் வாங்கினார். அதன் பின், வாணியம்பாடியில் உள்ள தன் உறவினரை பார்த்து விட்டு வருவதாக கூறி, கணவரை அனுப்பி விட்டார். தான் வாங்கிய தாலி மற்றும் கணவர் வீட்டார் போட்ட நகைகளை, அந்த கல்லூரியில் உள்ள ஒரு அறையில் வைத்து விட்டு, வேறு ஒருவருடன் அவர் சென்றது தெரியவந்தது. தகவல் அறிந்த பாலச்சந்திரன், இரவு, 7 மணிக்கு ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டார். இந்த விஷயம் கத்தாரி கிராமம் முழுவதும் பரவியது. இரவு, 9 மணிக்கு பதில் சொல்வதாக பஞ்சாயத்தில் சொல்லி விட்டு, சேகர் வீட்டுக்கு வந்தார். அவமானம் அடைந்த சேகர், விஜயலட்சுமி ஆகியோர், இரவு, 8 மணிக்கு திருமணமாகாத நிவேதா, அனிதாவை மட்டும் அழைத்துக் கொண்டு, வாணியம்பாடி அடுத்த சண்டியூருக்கு செல்வதாகவும், தான் வரும் வரை பத்திரமாக இருக்கும்படி நவீனாவிடம் கூறி விட்டுச் சென்றார். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

4 பேர் உடல்: இந்நிலையில், சண்டியூரில் வேட்டி என்பவரின் விவசாய நிலத்தின் வழியாக அப்பகுதி மக்கள் நேற்று காலை, 8 மணிக்கு சென்றனர். அப்போது விவசாய நிலத்தில், 2 பெண்கள் இறந்து கிடந்ததும், ஆணும், பெண்ணும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வாணியம்பாடி, டி.எஸ்.பி., அனிதா தலைமையில், திம்மாம்பேட்டை போலீசார், நான்கு பேரின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது, ஸ்ரீநித்யா, வேறு ஒருவருடன் ஓடிவிட்டதால், சேகர் குடும்பத்தினர் அவமானம் அடைந்து, சேகர், விஜயலட்சுமி, திருமணமாகாத மகள்கள் நிவேதா, அனிதா ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதை வீட்டில் ஒரு பேப்பரில் எழுதி வைத்து விட்டு, சண்டியூரில் வேட்டி என்பவரின் விவசாய நிலத்திற்கு சென்றனர்.

கழுத்தை நெரித்து கொலை: அங்கு நிவேதா, அனிதா ஆகியோர் கழுத்தை கயிற்றால் நெரித்து சேகர், விஜயலட்சுமி கொலை செய்தனர் . பிறகு சேகரும், அவர் மனைவி விஜயலட்சுமியும் அங்குள்ள மரத்தில், ஒரே கயிற்றில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு பேர் பலியான சம்பவம், அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன ஸ்ரீநீத்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.