அரசியல் தலைவர்கள் மிலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்தனர்

download (6)

இஸ்லாமிய பெருமக்களுக்கு ஆளுநர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் மீலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில். நபிகள் நாயகம் போதித்தது போல் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒற்றுமையான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும்‌ என கேட்டுக்கொண்டுள்ளார்.

வாழ்க்கையில் ஒருவொருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள், பசித்தவர்களுக்கு உணவளியுங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றினால், வாழ்வில் ஏற்றம் பெறலாம் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தீங்கு இழைப்பவர்களுக்கும் மன்னிப்பு வழங்கி, அன்பை வளர்க்கும் போதனைகளை தன் வாழ்நாளில் நபிகள் நாயகம் புகன்றதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

நபிகள் பிறந்த பொன்னாளில், சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதிகொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்லாமிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நபிகள் பெருமானார் உண்மையின் மறுவடிவமாக திகழ்ந்தவர் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறார்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கருணை, அன்பு, அமைதி, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்டவற்றை வாழ்க்கை முறைமைகளாக நபிகள் நாயகம் வலியுறுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாக நபிகள் நாயகம் திகழ்ந்தார் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.