இடம் மாறிய கிரீடம் உலக அழகிப்போட்டியில் குளறுபடி

piaw-1

‘மிஸ்யுனிவர்ஸ்’ போட்டி
அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் உள்ள பிளானெட் ஹாலிவுட் ரிசார்ட் அண்ட் கேசினோ என்னுமிடத்தில் 64–வது பிரபஞ்ச அழகிப் போட்டி (மிஸ் யுனிவர்ஸ்) நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் 80–க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு அறிவுத் திறன், நீச்சல் உடை, மாலை நேர உடை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு இறுதிப்போட்டிக்கு 10 அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிரபல கால்பந்து வீரர் எமித் ஸ்மித், வலைத்தள எழுத்தாளர் பெரஸ் ஹில்டன், 2012–ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகி ஒலிவியா கல்போ ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

ரசிகர்கள் ஓட்டு
இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அழகிகளில் பிலிப்பைன்ஸ்–ஜெர்மனி நடிகையும், பிரபல மாடல் அழகியுமான 26 வயது பியா அலோன்சா வர்ட்ஸ்பர்க் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் பிறந்தவர். இவரது பூர்வீகம் பிலிப்பைன்ஸ் ஆகும்.

முதல் முறையாக இறுதிச்சுற்றில் பங்கேற்ற அழகிகளுக்கு பார்வையாளர்களும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை நேரடியாக ரசித்தவர்களும் ஓட்டுப்போடும் முறை இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதிலும் பெரும்பான்மையான ஓட்டு வர்ட்ஸ்பர்க்கிற்கே கிடைத்தது.

இடம் மாறிய கிரீடம்
வெற்றி பெற்ற வர்ட்ஸ்பர்க்கிடம் இறுதிச்சுற்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘‘எச்.ஐ.வி. தொற்று குறித்து இளைய தலைமுறையினர் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இந்த உலகிற்கு எனது அழகான இதயத்தை திறந்து காட்டுவேன்’’ என்று அவர் பதில் அளித்து வாக்குகளை அள்ளிக் குவித்தார்.

முன்னதாக அழகிப்போட்டியை தொகுத்து வழங்கிய ஸ்டீவ் ஹார்வி முதலிடம் பிடித்த அழகி என்று கூறி கொலம்பியா நாட்டின் 21 வயது அரியட்னா குடியர்ரெஸ் என்பவரை தவறுதலாக அறிவித்து விட்டார். அவருக்கு வெற்றி கிரீடமும் அணிவிக்கப்பட்டு விட்டது. அப்போதுதான் அரியட்னா 2–ம் இடம் பிடித்தவர் என்பது தெரியவந்தது.

பின்னர் இந்த தவறுக்கு போட்டியை நடத்திய ஸ்டீவ் ஹார்வி மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, அரியட்னாவுக்கு அணிவிக்கப்பட்ட கிரீடம் அகற்றப்பட்டு வர்ட்ஸ்பர்க்கிற்கு சூட்டப்பட்டது.

அமெரிக்காவின் ஆக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது துல்சா இந்த போட்டியில் 3–ம் இடம் பிடித்தார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.