டெல்லியில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி 10 பேர் பலி

delhi plane crash

டெல்லி விமான நிலையம் அருகே எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சூப்பர்கிங் ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 10 பேர் பலியாகினர்.

சம்பவம் குறித்து டெல்லி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கூறும்போது, “இன்று காலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ராஞ்சிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான அந்த விமானத்தில் பைலட் உட்பட 10 பேர் இருந்தனர்.

விமானம் புறப்பட்டச் சில நிமிடங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட பைலட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், விமானத்தை விமான நிலையத்துக்கே திருப்பிச் செலுத்துவதாகவும் அவசரமாக தரையிறங்க ஓடுதளத்தை தயார் படுத்துமாறும் கோரினார்.

அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது. அதற்கான ஆயத்தப் பணிகளை செய்தோம். ஆனால் சில வினாடிகளிலேயே விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், காலை 9.50 மணியளவில் விமான நிலையத்துக்கு அருகேயே விமானம் விழுந்து நொறுங்கியது.

விமானத்திலிருந்த 10 பேர் பலியாகினர். சம்பவ இடத்துக்கு 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன” என்றனர்.

சம்பவ இடத்துக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைந்துள்ளார். விமானத்திலிருந்த 10 பேரும் பலியானதை விமான போக்குவரத்து துறை அமைச்சர் மகேஷ் சர்மா உறுதி செய்துள்ளார்.

பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

விமான விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லியில் எல்லை பாதுகாப்புப் படை விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் பலியானவர்களுக்காக வருந்துகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.