பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே பல் உடைவதும் சொல்லாலே – சிம்பு அனிருத் கூட்டனி பீப் பாடல்

download

சிம்பு, அனிருத் கூட்டணி உருவாக்கியதாக கூறப்படும் அந்த ‘பீப்’ பாடல் இணைய தளங்களில் ஒலித்து இதயங்களை காயப்படுத்தி இருப்பதை மறுக்க முடியாது.

கடந்த சில நாட்களாகவே சிம்பு, அனிருத் கைதாவர்களா? அவர்கள் மேல் என்ன நடவடிக்கை? என்ற பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது. ஆனால் அனிருத்துக்கு தொடர்பு இல்லை என்கிறது சிம்பு வாக்குமூலம்.

காதில் கேட்கவே கூசும் வார்த்தையால் வடிக்கப்பட்ட ஒரு பாடல் தான் அவர்களை இப்படி புலம்ப வைத்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக வெளியிடாத பாடலை விமர்சனம் செய்வதில் என்ன நியாயம்? தவறு செய்திருந்தால் நிச்சயம் மன்னிப்பு கேட்டு இருப்பேன் என்று சிம்பு சிலிர்க்கிறார்.

சமூகப்பொறுப்பு எல்லோருக்கும் இருந்தாலும் பிரபலங்களுக்கு முழுப்பொறுப்பு இருப்பதை உணர வேண்டும். சினிமா நாயகர்களையும், நாயகிகளையும் தலைமுறை வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் தங்கள் ரோல் மாடலாகவே நினைக்கிறார்கள்.

அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அவர்களை கொண்டாடும் ரசிகர்களுக்கு வேதவாக்கு போன்றது. எனவே கவனமும், நிதானமும் தேவை.

ஒருவர் ஆபாச படங்களை இணைய தளத்தில் பரவவிட்டுவிட்டு, நான் என் வீட்டில் ஜாலியாக தயாரித்தது. யாரோ திருடி வெளியிட்டுவிட்டார்கள் என்று கத்தினால் அவரை விட்டு விடுவார்களா? அதேபோல் தான் இதுவும்…?

வீட்டுக்குள் தனியறையில் பாடப்பட்டது. யாரோ திருடி வெளியிட்டுவிட்டார்கள் என்று வாதிடுவதில் தப்பில்லை. ஆனால் வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டதே! அது தானே பிரச்சனை!

நாலு சுவருக்குள் நடந்தால் அந்தரங்கம். அதுவே நடுரோட்டில் நடந்தால் அசிங்கம். அந்தரங்கம் எப்போதும் போற்றப்படும். அசிங்கம் தூற்றப்படும். இது தானே தமிழர் கலாச்சாரம்.

ஆனால் இந்த பாடலின் ‘பீப்’ வரி சமூகத்தில் விரசமான உணர்வுகளை வெளிப்படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தெரிந்தோ, தெரியாமலோ ஒரு தவறு நடந்துவிட்டால் அதற்காக மன்னிப்பு கோருவது கவுரவ குறைச்சலான விஷயம் இல்லை. அது தான் மனிதனின் உயர்ந்த பண்புக்கு இலக்கணம்.

அவர் ஏன் அதை செய்யவில்லை? அதற்கும் ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார். அது தான் ‘கூடா நட்பு’. பொதுவாக நட்பு வட்டாரம் கவனிக்க வேண்டியவை. நல்ல நட்பு நலம் தரும். தேவையில்லாத நட்பு கேடு விளைவிக்கும். சாதாரண குடும்பங்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் குடும்பம் வரை பிள்ளைகளின் நட்பு வட்டாரம் கவனிக்க வேண்டியது என்பதை ராஜேந்தர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

காலங்களை கடந்தும் எத்தனையோ பாடல்கள் தமிழர்களின் மூச்சுக்காற்றோடு கலந்து ஒலிக்கின்றன. ஆனால் காலப்போக்கில் நீர்க்குமிழிபோல் எத்தனையோ பாடல்கள் தோன்றி மறைந்தும் வருகின்றன.

இப்போது இந்த பிரச்சனையில் சிக்கி இருக்கும் இருவருமே சின்னவயதில் பெரிய சாதனைகளை செய்தவர்கள். ஆனால் போதிய அனுபவமும், பக்குவமும் இல்லாததால் விளையாட்டாய் செய்த தவறு வினையாய் முடிந்து இருக்கிறது. இப்போது விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

பல் உடைவதும் சொல்லாலே. பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே என்ற கிராமத்து பழமொழி இவர்களுக்கு நல்ல படிப்பினையை தரலாம்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.