வரி ஏய்ப்பவர்கள் பற்றிய தகவல் அளித்தால் ரூ.15 இலட்சம் பரிசு

express-file_m[1]

புதுடெல்லி,

வரி ஏய்ப்பவர்கள் பற்றிய தகவல் தெரிவிப்பவருக்கு, பதினைந்து லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

ரூ.15 லட்சம் பரிசு

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ‘வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் பற்றிய தகவல்களை தருகிறவர்களுக்கு, அவர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிற வரியில் 10 சதவீதம் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். அதிகபட்சமாக இதில் ரூ.15 லட்சம் வழங்கப்படும்’.

இது குறித்து நாடு முழுவதும் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புதிய அறிவுரைகள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிவுரைகள் கடந்த நிதி ஆண்டில் இருந்து நடப்பு நிதி ஆண்டு வரை பொருந்தும். இதை மத்திய நேரடி வரிகள் வாரியம் ‘சி.டி.பி.டி.’ வெளியிட்டுள்ளது.

ரகசியம் காக்கப்படும்

இதில் வரி ஏய்ப்பு செய்கிறவர்களைப் பற்றி தகவல்கள் தெரிவிப்பவர்கள் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும். சட்டப்படி தேவைப்படுகிறபோது மட்டுமே அவர்களை பற்றிய தகவல் தெரிவிக்கப்படும். மற்றபடி யாருக்கும், எதற்கும் தெரிவிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் பற்றி, குறிப்பிட்டு சொல்ல முடியாத, தெளிவில்லாத தகவல்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வெட்கம் அடையச்செய்யும் நடவடிக்கை

பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்கிறவர்களின் பெயர், முகவரி, செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி பற்றிய தகவல்களை நாளேடுகளில் வெளியிட்டு அவர்களை வெட்கம் அடையச்செய்யும் நடவடிக்கைகளை வருமான வரித்துறை இந்த ஆண்டு முதல் தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்த 50 பேரைப்பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன’’ என்றார்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.