ஆயுர்வேதம்

download (16)

அழகாக இருக்க விரும்பும் நீங்கள் காலை முதல் இரவு வரை செய்ய வேண்டிய சிறப்பான செயல்களை ஆயுர்வேதம் வர்ணித்துள்ள வகையில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் முதலாக வைகறைத் துயில் எழு எனும் உபதேசம் முக்கியமானது. சூர்ய உதயத்திலிருந்து முன் ஒரு மணி நேரம் அருணோதயவேளை. அதற்கு முன்னுள்ள ஒரு மணி நேரம் பிரம்ம முகூர்த்தம் எனப்படும். இந்த வேளையில் இயல்பாக மனம் தெளிந்து விருப்பு, வெறுப்பு முதலியவற்றால் கலக்கமில்லாதிருக்கும். இரவின் தன்மையாலும், அமைதியாலும் முன் நாளின் கொந்தளிப்பு அடங்கி, களைப்பு அகன்று தானே பொறிகளும், மனமும் சுறுசுறுப்புடன் விழித்தெழும் வேளை. ஆசை, கோபம், தாபம், சோகம், பயம் போன்ற எண்ண அலைகள் அடங்கி இன்னதென அறியமுடியாத அமைதி நிலவும் வேளை. இந்த வேளையில் நீங்கள் எழுந்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.

விழித்தெழுந்ததும் உடன் வாய் கொப்பளித்து அதன் பிறகு மலம், சிறுநீர் கழித்து, பல் துலக்கவும். தசனகாந்தி எனும் பற்பொடியால் பல் துலக்குவது சிறந்தது. அரை கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் (5 மி.லி) சுத்தமான தேன் கலந்து அதில் சிறிது இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அந்தக் கலவையைக் குடிக்கவும். இது உடல் பருமனைக் குறைக்க உதவும். அதன் பிறகு அரை, முக்கால் மணிநேரம் நடைப்பயிற்சி பழகவும். நன்றாக வியர்வை வரும்வரை நடந்த பிறகு அந்த வியர்வையை உடலிலேயே நன்றாக தேய்த்துவிடவும். இந்த நடைப்பயிற்சியை காலை வெயில் வந்த பிறகு செய்யவும்.

குண்டு மஞ்சளை தண்ணீரில் இழைத்து ரோமங்கள் உள்ள பகுதியில் தேய்க்கவும். இரண்டு சொட்டு இளநீர் குழம்பை கண்களில் விட்டுக்கொள்ளவும். குங்குமாதிதைலம் எனும் ஆயுர்வேத சொட்டுமருந்தை மூக்கினுள் இரண்டு, நான்கு சொட்டுகள் விட்டு உறிஞ்சி துப்பிவிடவும்.
ஏலாதிகேர தைலத்தை முகத்தில் நன்றாக அழுந்தித் தேய்த்துவிடவும். அரிமேதஸ் எனும் தைலத்தை ஒரு ஸ்பூன் (5 மி.லி) வாயினுள் விட்டு நன்றாகக் கொப்பளித்துத் துப்பவும்.
காதினுள் நான்கைந்து சொட்டு வசாலசுனாதி தைலத்தை வெதுவெதுப்பாக விட்டுக்கொள்ளவும்.
இவை அனைத்தும் தினமும் செய்யப்படவேண்டிய முறைகளாகும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நீலிப்ருங்காதி எனும் தேங்காய் எண்ணெயை பஞ்சில் முக்கி எடுத்து தலையில் ஊறவிடவும். அரை, முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.

எண்ணெய்ப் பிசுக்கை அகற்றிக்கொள்ள சீயக்காயுடன் சிறிது கடலை, பயறு, அரிசிமாவு, வெந்தயத்தூள் ஆகியவற்றைக் கலந்து தண்ணீரில் கரைத்து உடலெங்கும் தேய்த்து அலம்பிக் கொள்ளவும். இவற்றின் மூலம் தேவையற்ற ரோமங்கள் நீங்கும், உடலின் கருமை நிறம் குறையும். முடி நன்றாக வளரும். உடல் வனப்பு கூடுவதால் நீங்கள் பார்ப்பதற்கு அழகாகத் தெரிவீர்கள்.
பெண்மையைப் போற்றி வளர்க்கும் சதாவரீகுலம், பலசர்ப்பிஸ், குமார்யாசவம், தான்வந்திரம் கஷாயம், பலாதைலம், அசோகாரிஷ்டம், புஷ்யானுகம் சூர்ணம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் உங்களுக்கு நல்ல பலன் தரக்கூடியவை.

ஓர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி இவற்றில் எது உங்களுக்குப் பொருந்துமோ அவற்றை நீங்கள் சாப்பிடலாம். மனதில் கோபதாபங்களுக்கு இடம் தராமல் தக்கப் போக்கிடம் காட்டி அவற்றைத் தவிர்த்து மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் நீங்கள் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். எந்த செயலிலும், விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் ஈடுபட்டு கருத்தூன்றிச் செய்வதால் மனதின் நிறைவான பலனை பெற்றதற்கான மகிழ்ச்சி ஏற்படும். இரவில் படுக்கும் முன் பல் தேய்த்து, பாதங்களைச் சுத்தப்படுத்தி, சுடுதண்ணீரால் வாய்க் கொப்பளித்து, ஒரு கிளாஸ் (300 மி.லி) வெந்நீரைக் குடித்து கிழக்கு அல்லது தெற்குமுகமாக தலை வைத்து இடது புறம் சரிந்து படுக்கவும். இதனால் இரவில் உண்ட உணவு விரைவில் செரிக்கும். காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்துகொள்ளலாம்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.