தங்கம் தோன்றியது எப்படி

download (28)

உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதியளவு தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்படுகிறது.
கனடா, அமெரிக்க, ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்காவிலும், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூக்கொடை என்னுமிடத்தில் களனி ஆற்றுப் பகுதியில் ஆற்று மண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாக கூறப்பட்டாலும், மிக குறைந்த அளவே அங்கிருந்து கிடைக்கிறது.

இந்த தங்க உலோகம் புவியில் தோன்றியது எப்படி?
புவி தோன்றிய பல ஆண்டுகளுக்கு பின்னர், இருபது பில்லியன் டன்களுக்கு மேற்பட்ட எடையுடைய எரிகல் ஒன்று பூமியின் மீது தங்கத்தையும், பிளாட்டினத்தையும் மழை போல பொழிந்துள்ளது. அதிலிருந்து தான் இன்றளவும் கிடைக்கின்ற தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பல தனிமங்கள் வந்துள்ளன என்ற புவியியலாளர்கள் கூறுகின்றனர். எரிகல் பொழிவால் தங்கம் தோன்றியுள்ளது என பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக நடத்தப்படட புதிய ஆய்வில், காலாவதியான மிக அடர்த்தியான விண்மீன்களின் மோதல்களால் புவியிலுள்ள தங்கம் தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் புவியில் கிடைக்கும் உலோகங்களில் மிக அரியது மட்டுமல்ல, இந்த பேரண்டத்திலும் அரியதே. கரி மற்றும் இரும்புப் பொருட்களை போல, தங்கம் விண்மீன்களிலே எளிதாக கிடைக்கக்கூடிய உலோகமல்ல. எனவே, மிக மோசமான அழிவுகளோடு மாற்றங்களை ஏற்படுத்துகிற அண்டவெளியில் ஏற்படும் மோதல்களால் தான் தங்கம் தோன்றிருக்க முடியும் என்று இந்த புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இரு நியுட்ரான் விண்மீன்களின் மோதலால் ஏற்படும் சூப்பர் நோவா எனப்படும் விண்மீன் வெடிப்பு அல்லது காலாவதியான விண்மீன் மையங்களின் மோதல் போன்றவற்றால் தங்கம் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரண்டு நியுட்ரான் விண்மீன்கள் மோதுகின்றபோது, பத்து நிலவுக்கு சமமான தங்கம் உற்பத்தியாகி வெளிப்படுகிறது என்று இந்த ஆய்வை மேற்கொண்டோர் மதிப்பிட்டுள்ளனர். ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் நாசா ஸ்விப்ட் செயற்கைக்கோள் கண்டறிந்த காமா கதிர்களின் வெடிப்பு என்று அறியப்படும் ஜிஆர்பி 130603பி-யில்  கண்டறிந்தவற்றை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
காமா கதிர்களின் வெடிப்பு இரண்டு நியுட்ரான் விண்மீன்களின் மோதலால் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. அப்படியானால், புவியிலிருந்து 3.9 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இடம்பெறும் இந்த காமா கதிர் வெடிப்பு வினாடியில் பத்துக்கு இரண்டு என்ற அளவிலான சொற்ப நேரமே நீடிக்கிறது. காமா கதிர்கள் மிக விரைவாக மறைந்து விட்டாலும், அந்த வெடிப்பு மெதுவாக மறையும் கனல் ஒளி அகச்சிவப்பு ஒளியால் பரவி நிலைபெற்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அந்த ஒளியும், பண்புகளும் உயர்வேக ஜெட் விமானம் வெளியேற்றும் துகள்கள் சுற்றுச்சுழலில் மெதுவாக மறைவது போன்ற உண்மையான கனல் ஒளி மறையும் நிலைமையை வெளிப்படுத்தவில்லை. அந்த கனல் ஒளி நியுட்டரான் விண்மீன்கள் மோதலில் வெளியான நியுட்ரான் செறிந்த பொருளால் உற்பத்தியாகும் வேறொரு கதிரியக்க தனிமம் போன்று தோன்றியது. நியுட்ரான் விண்மீன் மோதலையும், அதனோடு உருவாகும் காமா கதிர்களின் வெடிப்பையும் இணைத்து விளக்குவதற்கு மறுக்க முடியாத உறுதியான சான்றை தேடிக் கொண்டிருந்த ஆய்வாளர்களுக்கு ஜிஆர்பி 130603பி-லிருந்து கிடைத்த கதிரியக்க கனல் ஒளி மறுக்க முடியாத உறுதியான சான்றாகிவிட்டது. ஏறக்குறைய நூறில் ஒரு பங்கு சூரிய நிறை அளவுக்கான பொருட்கள் காமா கதிர் வெடிப்பில் வெளியாகிறது.

அந்த பொருட்களில் தங்க உலோகமும் இடம்பெறுகிறது. ஒரு காமா கதிர் வெடிப்பில் உருவாகும் தங்கத்தையும், பேரண்ட காலத்தில் ஏற்பட்டுள்ள அதுபோன்ற வெடிப்புக்களையும் கணக்கிட்டு பார்த்தபோது, இவ்வுலகிலுள்ள எல்லா தங்கமும் காமா கதிர்களின் வெடிப்பால் தோன்றியிருக்கலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாம் அனைவரும் விண்மீன்களால் அதாவது நட்சத்திர இராசியால் வழிநடத்தப்படுகிறோம் என்றால், நாம் அணியும் அணிகலன்கள் அனைத்தும், விண்மீன் மோதலால் உருவான பொருட்கள் என்னலாம்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.