வாட்ஸ் அப் பயன்பாட்டில் பாதுகாப்பு குறைவு

whats app
உடனடி செய்திகளைப் பரிமாறிக் கொள்வதில், இன்று மிகப் பெரிய அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்ட தளமாக வாட்ஸ் அப் வளர்ந்துவிட்டது. நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துபவராக இருந்தால், அதில் உள்ள பாதுகாப்பு குறைவான வழிகள் சிலவற்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.இணைய மால்வேர் புரோகிராம்கள்: இப்போது வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, பெர்சனல் கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகப் பயன்படுத்தலாம் என்று வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.
இதனால், பல ஹேக்கர்கள், வாட்ஸ் அப் தளத்திலிருந்து வருவதைப் போன்ற செய்திகளை உலா விட்டுள்ளனர். பல வாடிக்கையாளர்கள், இந்த போலியான தளங்களில் சிக்கி, கொத்து கொத்தாகத் தங்கள் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்து இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆண்ட்டி வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் காஸ்பெர்ஸ்கி லேப்ஸ், வாட்ஸ் அப் போல, போலியாக இயங்கும், அதுவும் பல்வேறு மொழிகளில் இயங்கும் தளங்களைக் கண்டறிந்துள்ளனர். இவை, வங்கிக் கணக்குகள் போன்றவற்றைக் கண்டறிந்து கறந்துவிடும் வகையில் இயங்கும் மால்வேர்களாக உள்ளன.
இதிலிருந்து தப்பிக்கும் வழி எளியதுதான். பெர்சனல் கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் செயலி இயங்க வேண்டும் என்றால், அந்த நிறுவனத்தின் இணைய தள முகவரி உள்ள உண்மையான தளம் சென்று, அதற்கான புரோகிராமினைத் தரவிறக்கம் செய்திடவும். நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://web.whatsapp.com/.
கிராஷ் ஆகும் செய்திகள்: 
யாராவது ஒருவர், உங்களுக்கு 7 எம்.பி. அளவிலான மெசேஜ் ஒன்றை வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பினால், உங்கள் அக்கவுண்ட் க்ராஷ் ஆகும் வாய்ப்பு உள்ளது. இது அண்மையில் கண்டறியப்பட்டது. இந்த செய்தியைப் பெற்ற பின்னர், எப்போது வாட்ஸ் அப் சென்றாலும், அது க்ராஷ் ஆனது. இது பரவலான பின்னர், தற்போது 2 எம்.பி. அளவில் செய்தி அனுப்பினாலும் க்ராஷ் ஆனது தெரியவந்தது. இந்த செய்தியில், சில ஸ்பெஷல் கேரக்டர்கள் இருந்தன. மெசேஜ் பேக் அப் ஆனாலும், அந்த குறிப்பிட்ட செய்தி வந்த உரையாடலை மீண்டும் சென்று பார்த்தால், அது கிராஷ் ஆனது.
இது அந்த மெசேஜ் அனுப்பியவருக்கும் பெற்றவருக்கும் மட்டுமின்றி, இவர்களில் யாரவது ஒருவர், குரூப் ஒன்றில் சேர்ந்திருந்தால், அந்த குழுவின் நடவடிக்கைகளும் கிராஷ் ஆகும். இது தனிப்பட்ட நபருக்குப் பெரிய இழப்பினைத் தராது. இதுவே, நிறுவனங்களுக்கானது எனில், ஈடுகட்ட முடியாத இழப்பினைத் தரும். இந்த பிரச்னைக்கான தீர்வினை இன்னும் யாரும் தரவில்லை.விரைவில் வாட்ஸ் அப் அல்லது பேஸ்புக் பொறியாளர்கள், தீர்வினைக் கண்டு தருவார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்த கிராஷ் ஆகும் பிரச்னை, ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் வாட்ஸ் அப் செயலியில் மட்டுமே ஏற்படுகிறது. மற்ற இயக்க முறைகளில் உள்ள வாட்ஸ் அப் செயலியில் ஏற்படவில்லை.
மீறப்படும் ப்ரைவசி செட்டிங்ஸ்: 
அண்மைக் காலத்தில், வாட்ஸ் அப் செயலிக்கான பாதுகாப்பு கூடுதலாகப் பலப்படுத்தப்பட்டது. இருப்பினும், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் திருடப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மைக்கேல் என்பவர், வாட்ஸ் அப் நாம் எண்ணுகிறபடி, அதிக பாதுகாப்பு கொண்ட செயலி அல்ல என்று கூறியுள்ளார். WhatsSpy Public என்ற தர்ட் பார்ட்டி புரோகிராம் மூலம், அடுத்தவருடைய ஸ்டேட்டஸ் மெசேஜ், ஸ்டேட்டஸ் மாற்றங்கள், அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் போட்டோ, அதன் மாற்றம் ஆகியன குறித்து உடனுடக்குடன் அறியலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த செயலியின் மூலம், மற்றவர்களின் செட்டிங்ஸ் அமைப்பினையும் மாற்ற முடியும். துரதிருஷ்டவசமாக, இதற்கு எதிராக நாம் எதுவும் செய்திட முடியாது. வாட்ஸ் அப் நிறுவன வல்லுநர்களே, இதற்கான பாதுகாப்பு பைலை வழங்கிட வேண்டும்.
மற்ற பயனாளர்களை வேவு பார்ப்பது: 
வாட்ஸ் அப் அண்மையில், அதன் செயலியில் இடப்படும் செய்திகளை, தகவல்களை, அனுப்பப்பட்ட இடத்திலிருந்து, அது பெறப்படும் இடம் வரையிலும், பாதுகாப்பான முறையில் சுருக்கி அனுப்பி, இறுதி நிலையில் விரித்துக் காணும் வகையில் அமைத்திருந்தது. இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும், நம் உரையாடல்களை இன்னொருவர் கைப்பற்ற முடியும் என்ற உண்மை நம்மைப் பயமுறுத்துகிறது. mSpy என்ற ஒரு சாப்ட்வேர் புரோகிராம், ஒருவர் அனுப்பும் மெசேஜ்கள், அழைப்புகள், பிரவுசிங் தளங்கள் இன்னும் பல விஷயங்கள் குறித்து, இந்த சாப்ட்வேர் நிறுவியவருக்கு அனுப்புகிறது.
இந்த ஸ்பை வேர் செயலியை, உங்கள் போனில் சில நொடிகளில் பதித்துவிடலாம் என்பதால், அது உங்கள் போனில் வருவது உங்களுக்குத் தெரியாமலே போகலாம்.இது போன்ற வேவு பார்க்கும் புரோகிராம்களை, நம் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களின் பட்டியலை அவ்வப்போது ஆய்வு செய்தால், கண்டறிந்து நீக்கிவிடலாம். வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? இவ்வளவு சிக்கல்கள், மால்வேர் புரோகிராம்கள் பாதிக்கும் வாட்ஸ் அப் மெசஞ்சர் செயலியை, நாம் வைத்துக் கொள்ள வேண்டுமா? நீக்கிவிடலாம் என்று தோன்றுகிறதா? வேண்டாம். அவ்வாறு நீக்க வேண்டாம். இன்றைக்கு இணைய உலகில், இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்ப உதவும் செயலிகளில், அதிக அளவு எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பது வாட்ஸ் அப் புரோகிராம் தான். எனவே, இதனை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்துச் செயல்படவும்.

 

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.