கொழும்பு டெஸ்ட்: இலங்கை 306 ரன்னில் ஆல் அவுட்

335a802a-7a4d-4c36-b975-4c08050df3c1_S_secvpf

கொழும்பு, ஆக. 22–

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 393 ரன் குவித்தது. தொடக்க வீரர் ராகுல் 108 ரன்னும், ரோகித் சர்மா 79 ரன்னும், கேப்டன் வீராட் கோலி 78 ரன்னும், விக்கெட் கீப்பர் விர்த்திமான் சகா 56 ரன்னும் எடுத்தனர். ஹெராத் 4 விக்கெட்டும், தமிகாபிரசாத், மேத்யூஸ், சமீரா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி நேற்றைய 2–வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் மேத்யூஸ் 19 ரன்னும், திரிமானே 28 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி டெஸ்ட்டில் விளையாடும் சங்ககரா 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். இன்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள்.

இலங்கை அணி 55–வது ஓவரில் 150–வது ரன்னை தொட்டது. கேப்டன் மேத்யூசும், திரிமானேயும் பொறுப்பை உணர்ந்து விளையாடினார்கள். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினார்கள். மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை பிரிக்க இயலவில்லை. அதாவது 28 ஓவர் வீசியும் எந்த விக்கெட்டையும் எடுக்க முடியவில்லை. மதிய உணவு இடைவேளையின்போது இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து இருந்தது. மேத்யூஸ் 72 ரன்னிலும், திரிமானே 57 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்குப்பிறகு இந்தியாவின் கை ஓங்கியது. புதுப்பந்தில் இசாந்த் சர்மா திரிமானே விக்கெட்டை வீழ்த்தினார். திரிமானே 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து காலே டெஸ்டில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த சண்டிமால் களம் இறங்கினார். இவரை நீண்ட நேரம் களத்தில் நிற்க விடாமல் இசாந்த் சர்மா 11 ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பினார்.

இவ்வாறு இரண்டு விக்கெட்டுகள் விரைவில் விழுந்தாலும் மறுமுனையில் கேப்டன் மேத்யூஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். சதம் அடித்த மேத்யூஸ் 102 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை பின்னி கைப்பற்றினார். 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் பின்னிருக்கு இதுதான் முதல் விக்கெட்டாகும். அடுத்து வந்த பிரசாத்தை மிஸ்ரா அவுட் ஆக்கினார். இது மிஸ்ராவின் 50-வது டெஸ்ட் விக்கெட்டாகும்.

2-வது நாள் தேனீர் இடைவேளை இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்திருந்தது. தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணி 306 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி சார்பில் மிஸ்ரா 4 விக்கெட்டும், இசாந்த் சர்மா மற்றும் அஸ்வின் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

தற்போது இந்தியா 87 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்சை ஆடி வருகிறது. 2-வது இன்னிங்சில் நாளை மதியம் வரை நிலைத்து நின்று விளையாடி இலங்கை அணிக்கு 300 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கு நிர்ணயித்தால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.