ஜி சாட்–6 செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி– டி6 ராக்கெட் 27–ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது

download (1)

சென்னை,

தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக ஜி.எஸ்.எல்.வி–டி6 ராக்கெட் வரும் 27–ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.52 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஜி.எஸ்.எல்.வி–டி6 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

‘இஸ்ரோ’ வரலாற்றில் 1999–ம் ஆண்டு மே 31–ந்தேதி முதல் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு வருகிறது. இவற்றில் 45 செயற்கைக்கோள்கள் 19 நாடுகளை சேர்ந்தவையாகும். 27 செயற்கைக்கோள்கள் நம் நாட்டுக்கு சொந்தமானவை. இதனை தொடர்ந்து தகவல் தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிவதற்காக ஜி சாட்–6 என்ற செயற்கைகோள், ஜி.எஸ்.எல்.வி – டி6 ராக்கெட் மூலம் அனுப்பப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:–

தட்பவெப்பநிலை

தகவல் தொடர்பு சேவைக்காக ஜிசாட்–6 என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி– டி6 ராக்கெட் மூலம் வரும் 27–ந்தேதி மாலை 4.52 மணிக்கு சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் விரைவில் தொடங்கவிருக்கிறது. இது 9–வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டாகும்.

தட்ப வெப்ப நிலையை கவனித்து அதன் விளைவை தொலைவிடத்துக்கு அனுப்புவதுடன், செல்போன் மற்றும் தொலைதொடர்பு துறைக்கு பயன்படும் வகையிலான செயற்கைகோள் இந்த ராக்கெட்டில் அனுப்பப்படுகிறது.

பூமியை சுற்றி

3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி – டி6 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2–ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு வருகிறது. மூன்றாவது நிலையில் முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளினால் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.

49.13 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி – டி6 ராக்கெட்டின் எடை 414.75 டன் ஆகும். இதில் அனுப்பப்படும் ஜி–சாட்–6 செயற்கைகோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டர் தூரமும், குறைந்தபட்சமாக 180 கிலோ மீட்டர் தூரமும் கொண்ட பாதையில் பூமியை சுற்றி வரவிருக்கிறது.

கிரையோஜெனிக் என்ஜின்

கடந்த 2010–ம் ஆண்டில் கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி, ராக்கெட்டை செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முயற்சி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6–ந்தேதி செலுத்தப்பட்ட ராக்கெட் மூலம் வெற்றி கிடைத்துள்ளது. அத்துடன் கிரையோஜெனிக் என்ஜினை சுயமாக தயாரித்து அதன் மூலம் ராக்கெட்டை அனுப்ப இந்திய விஞ்ஞானிகள் கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றிகள் கிடைத்து வருகிறது. அத்துடன் இந்தியாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டில் அதிகபட்ச எடைகொண்ட ராக்கெட் என்ற பெருமையை ஜி.எஸ்.எல்.வி – டி6 ராக்கெட் பெறுகிறது.

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் உதவியுடன் ஜி.எஸ்.எல்.வி – டி6 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்படுவதன் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் நிபுணராக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து உள்ளது. இது ஒரு சாதனை ஆகும்.  இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.