விவசாயப் பொருட்களில் உள்ள நச்சுப்பொருட்கள்…

poison

மிழகம் இன்று இரு பெரும் அழிவுகளைச் சந்தித்து வருகின்றது. ஒன்று தமிழகத்தின் மண் வளமானது நாசமாக்கப்பட்டுள்ளது, மற்றொன்று நீர் வளமானது குன்றிப் போயுள்ளது.

அதே சமயம் தமிழகத்தின் ஜனப்பெருக்கம், வேளாண் நிலங்களை குறைத்துவிட்டது, ஆனால் உணவு உற்பத்தியின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் தமிழக விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெறவும், லாபமீட்டவும் மரபுவழி வேளாண்மையை கைவிட்டுவிட்டு நவீன வேளாண்மையை நாடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு மத்திய அரசின் தவறான வேளாண் கொள்கைகளால் சுவாமிநாதன் போன்றோரோது தொலைநோக்கற்ற திட்டங்களால் பசுமை புரட்சி என்ற பெயரில் விவசாயிகளை ரசாயன உரங்களை நோக்கியும், பூச்சிக் கொல்லிகளை நோக்கியும் தள்ளியது. அது மட்டுமின்றி ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், கண்மாய்கள், குட்டைகள் என்பவை சிதைக்கப்பட்டதால் தமிழகத்தின் நீராதாரமும் வற்றியது. இந்த நிலையில் அமுது படைத்த விவசாய பெருமக்கள் நஞ்சைப் படைக்கத் தொடங்கினார்கள்.

கடந்த மாதம் கேரள மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர் தி.வி. அனுபமா தமிழக வேளாண்துறை உற்பத்தி ஆணையர் ராஜேஷ் லாகானிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் தமிழக காய்கறிகளில் அதிகளவு நஞ்சிருப்பதால் அதனை உட்கொள்வோருக்கு புற்றுநோய் பரவுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக கேரள மாநிலத்தின் பெருமளவிலான உணவுத் தேவைக்கு தமிழகமே காய்கறிகள், பழங்கள், தானியங்கள், இறைச்சி வகைகளை ஏற்றுமதி செய்து வருகின்றது. இதனால் கேரளாவின் பல பாகங்களில் மக்களிடையே புற்றுநோய் பெருகி வருவதாக கேரள மாநிலம் எடுத்துக் கூறியது. இந்நிலை தொடருமானால் இருமாநில மக்களின் உடல்நிலை என்பது மிகவும் மோசமான நிலைமையை அடையலாம் என அவர் விசனம் தெரிவித்திருந்தார்.

மிக முக்கியமாக தமிழகத்தில் பண்ணைக் குடில்களில் செய்யப்படும் வேளாண் பொருட்களில் மிக அதிகமான அளவில் நஞ்சுப் பொருட்கள் கலந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. பண்ணைக் குடில் ( Polyhouse ) மூலமாக செய்யப்படும் வேளாண்மை முறையை தமிழக அரசு அதிகம் ஊக்குவித்து வருகின்றது. மண்ணில் வளராமல் ரசாயன நீரைத் தெளித்து வளர வைக்கப்படும் இம்முறையில் அதிகளவு மகசூலையும், லாபத்தையும் பெறலாம் எனக் கூறப்படுகின்றது. இங்கு செயற்கையான முறையில் தட்ப வெட்பங்கள் அமைக்கப்படுகின்றன, ஆனால் இந்த தட்ப வெட்பத்தால் அதிகளவு பூச்சிகள் உருவாகிவிடுகின்றன. இயற்கையான முறையில் பூச்சிகள் உருவாகும் போது அவற்றை பிற உயிரினங்கள் கொத்தி தின்றுவிடுகின்றன. ஆனால் பண்ணைக் குடில்களில் அவ்வாறான சூழல் ஏதும் இருப்பதில்லை. இதனால் அங்கு அதிகளவு பூச்சிக் கொல்லிகளை நீரில் கலந்து தெளிக்கின்றனர். இதன் மூலம் காய்கறிகள் அதிகம் நஞ்சுடையதாக மாறிவிடுகின்றது.

பண்ணைக் குடில்கள் என்று மட்டுமில்லை மண்ணில் செய்யப்படும் வேளாண்மை முறைகளில் கூட மிக அதிகமான அளவில் பூச்சிக் கொல்லி மருந்துகளையும், ரசாயன உரங்களையும் பயன்படுத்துகின்றனர். பூட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோசு, காலிபிளவர், கத்தரிக்காய் போன்றவைகளில் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கின்றனர். அவை வளர்க்கப்படும் போது மட்டுமில்லாமல் வண்டிகளில் ஏற்றப்படும் போதும் கூட அவற்றின் மீது இந்த பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்துவிடுகின்றனர்.

இந்த குறிப்பிட்ட காய்கறிகள் மட்டுமில்லை சொல்லப் போனால் அனைத்து காய்கறிகள், பழங்கள் போன்றவைகளில் சொல்ல முடியாத அளவில் நஞ்சு கலந்துவிடப்பட்டு சந்தைகளுக்கு வருகின்றன. பலரும் நம்புவது போல வெறும் வெளித்தோலை உப்பிட்ட நீரிலோ, வெந்நீரிலோ கழுவவதன் மூலம் இந்த நஞ்சுகளை போக்கிவிட முடியும் என நம்புவது முட்டாள் தனமானவை. அவ்வாறு கழுவுவதன் மூலம் ஓரளவு மட்டுமே நஞ்சுக்கள் நீக்கப்படும். ஆனால் காய்கறி, பழங்களுக்குள்ளேயே போய்விட்ட நஞ்சை எவ்வாறு நீக்க முடியும்.

வெறும் மேகி நூடுலில் மட்டுமல்ல இந்தியாவின் பெரும்பான்மையான உணவுப் பொருட்களில் நஞ்சு மிகுந்து காணப்படுகின்றது. கேரளா, கருநாடகம், ஒதிசா, சிக்கிம் போன்ற ஒரு சில மாநிலங்கள் மட்டுமே பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை அமுலாக்கியுள்ளது. இயற்கை விவசாயங்களையும் ஊக்குவித்து வருகின்றது. ஆனால் தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் சந்தைகளில் மிக அதிகமான பூச்சிக் கொல்லிகள், ரசாயன உரங்கள் விற்பனை செய்யப்படுவதோடு. விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி இதனை விற்பனை செய்தும் வருகின்றனர். மாநில அரசாங்கங்களும் போதிய கட்டுப்பாடுகளையோ, விழிப்புணர்வுகளையோ ஏற்படுத்தவில்லை.

இதற்கு முக்கியமான காரணங்கள் என்ன என்பதை நாம் ஆராய வேண்டும். தமிழகத்தின் மண்வளமும், நீர்வளமும் குன்றிப் போய்விட்டது. ஒரு பக்கத்தில் அதிகளவிலான மக்கள் தொகை ஏனைய மாநிலங்களை விடவும் தமிழகம், கேரளம் ஆகியவற்றில் மக்கள் தொகை நெருக்கம் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால் வேளாண் நிலங்கள், நீர்வளப் பகுதிகளான ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்றவை குடிமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. மறுபக்கத்தில் அதிக உணவுத் தேவை ஏற்படுகின்றது. பத்து கோடி மக்களுக்கான உணவை தமிழகம் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றது. இதனால் குறைந்த காலத்தில் அதிக விளைச்சலையும், வருவாயையும் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருக்கின்றது. இதில் இடைத்தரகர்கள் வேறு மாபியாக்களாக இருப்பதால் கொள்ளை லாபங்கள் என்பதே குறிக்கோளாக விவாயத் துறை மாறிவிட்டுள்ளது.

தமிழக வேளாண் நிலங்களில் போதிய உயிர்ச் சத்து இல்லை என்பதையே ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. கடந்த முப்பது வருடங்களில் தமிழக வேளாண் நிலங்களின் உயிர்ச்சத்துக்கள் பாதியாக குறைந்துவிட்டன. 1971-யில் 1.2% ஆக இருந்த மண்ணின் உயிர்ச்சத்தின் அளவு, கடந்த 2002-யில் 0.68% ஆக குறைந்திருக்கின்றது. அதுவும் சில மாவட்டங்களின் நிலைமையோ மிகவும் மோசமாக உள்ளது. மதுரையில் வெறும் 0.23% உயிர்ச்சத்து தான் மண்ணில் காணப்படுகின்றது. கிருஷ்ணகிரியில் 0.36 % மட்டுமே காணப்படுகின்றது. வேலூர், ஈரோடு பகுதிகளில் மண்ணின் உயிர்ச்சத்து நிலைமை (4.04% & 4.2%) நன்றாக இருக்கின்ற போதும் அங்கு வேறுவிதமான ஒரு சிக்கல் எழுந்தது. ஈரோட்டில் பவானி ஆற்றில் விடப்பட்ட ஆயத்த ஆடையகங்களி இருந்து வெளியேற்றப்பட்ட வேதியல் கழிவுகள் மண்ணை, நீரையும் கெடுத்துவிட்டது. வேலூரிலோ தோல் பதனிடப்படும் தொழிற்சாலைக் கழிவுகளால் நீர்வளத்தை மாசாக்கிவிட்டது.

தஞ்சைப் கழிமுகதுறைப் பகுதிகளில் ஒரு போகம் அறுவடை செய்த பின்னர், மிச்சமுள்ள பயிர்களை மக்க விடுகின்றனர், இதன் மூலம் மண்ணின் கார்பன் அளவு அதிகரித்து மண்ணை வளமாக்குவதாக தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கே ராமசாமி தெரிவித்திருக்கின்றார். ஆனால் மாநிலத்தின் மற்ற பாகங்களில் இவ்வாறு செய்வதில்லை, ஒரு போகம் முடிந்த பின்னர் இடைவெளியின்றி அடுத்தடுத்து விவசாயம் செய்து கொண்டே இருக்கின்றனர்.

இதில் மற்றொரு பிரச்சனை முன்பு எல்லாம் மாடுகள் வைத்து உழுவார்கள், அதன் சாணமும், மூத்திரமும் மண்ணுக்கு எருவாக மாறிவிடும். ஆனால் இன்று முற்று முழுவதும் திராக்டர் மூலம் உழுவதால் அந்த உயிர்ச்சத்தும் கிடைப்பதில்லை. மண்ணில் எப்போதும் மக்கிய இலை தளைகள், மண் புழுக்கள், நுண்ணுயிரிகள் போதிய அளவில் இருக்க வேண்டும். ஆனால் அதிகளவு பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதாலும், ரசாயன உரங்களை இடுவதாலும் மண்ணில் வாழ்கின்ற மண் புழுக்கள், நுண்ணுயிரிகள் இறந்து போய்விடுகின்றன.

அதிக விளைச்சலை அடைய உள்ளூர் உரக்கடைகள் அதிகளவு உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் விவசாயிகளுக்கு விற்பனை செய்கின்றன. இந்த உரக்கடைகளை நடத்துவோர் அரசியல் செல்வாக்கோடு இயங்குவதால் கொள்ளை லாபத்தைக் கருத்தில் கொண்டு இதனை தடுத்து நிறுத்த அரசாங்கமும், அதிகாரிகளும் மெத்தனம் காட்டி வருகின்றனர். மறுமுனையில் இந்த காய்கறிகளை கொள்வனவு செய்கின்ற இடைத்தரகர்களும் காய்கறிகள் வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுகும் போகும் போது கெடாமல் இருக்கவும், பூச்சிகள் வராமல் இருகவும் விவசாயிகளை அதிகளவு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த கட்டாயப்படுத்துகின்றனர்.

புரிடான், மோனோகிரோட்டோபோஸ், அசிபேட், பாலிட்டிரின் போன்ற ரசாயனங்கள் புற்றுநோய், ஆண்மைக் குறைவு, மூளைச்சிதைவு போன்ற நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன. தமிழக பண்ணைகளில் ஆய்வு செய்த கேரள மாநில அதிகாரி அனில்குமார் தெரிவிக்கையில் பெரும்பலான பண்ணைகளை தனியார் உரநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன என்ற அதிர்ச்சியான அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த அறிக்கையின் பேரில் தமிழக அரசு விவசாயிகள் உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் நினைத்தபடி வாங்க முடியாதளவில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உள்ளூர் வேளாண் அதிகாரிகள், பண்ணை அதிகாரிகளின் பரிந்துரைச்சீட்டை பெற்றப் பின்னரே, அவர்களின் வழிகாட்டலில் மட்டுமே விவசாயிகள் இனி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் வாங்க முடியும் என உத்தரவிட்டுள்ளது. இது ஒருவகையில் நல்லதொரு முன்னேற்றம் என்றாலும் கூட இதை தனியார் உரநிறுவனங்களின் தலையீடு இல்லாமல் வெற்றிகரமாக நிறைவேற்றினால் மட்டுமே ஓரளவாவது மண்ணையும், மக்களின் உடல்நலத்தையும் காப்பாற்ற முடியும்.

உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மட்டுமில்லை நல்ல நீர்வளம் இல்லை என்றாலும், மண்ணரிப்பு இருந்தாலும் மண்ணின் வளம் பறிபோய்விடும் என சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வு அறக்கட்டளையின் இயக்குநர் சுல்தான் அகமது இஸ்மாயில் தெரிவித்திருந்தார்.

இன்று பல இளைஞர்கள் இயற்கை விவசாய முறைக்கு மாறி வருகின்றனர். ஆனால் அக்கம் பக்கத்து பண்ணைகளில் அதிகளவு உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் தெளிப்பதால் அவை மண்ணுக்குள் போவதோடு நீர் வளத்தையும் மாசாக்கி விடுகின்றன. இதனால் இயர்கை விவசாயம் செய்வோருக்கு அதிக கேடுகளை உண்டாக்கிவிடுகின்றன. இயற்கை விவசாயம் செய்யப்படுகின்ற நிலங்களில் உயிர்ச்சத்து பெருகுவதோடு, கார்பன் அளவும் அதிகமாவதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் குன்றாவள இயற்கை வேளாண்மைத் துறை தலைவர் ஏ. சோமசுந்தரம் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் தமிழக அரசாங்கம் விரைவில் சிறப்பு இயற்கை வேளாண்மை மண்டலங்களை உருவாக்கவுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போல இயற்கை வேளாண் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு முற்று முழுவதுமாக இயற்கை வேளாண்மை மட்டுமே செய்யப்படும். அதில் விளையும் பொருட்களை அரசே கொள்வனவு செய்து விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் மூன்றாண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்ட போதும் ஆளும் மாநில அரசாங்கத்தினால் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கேரள அரசாங்கத்தின் கட்டாயத்தினால் இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்ற தமிழக அரசு முன் வந்துள்ளது.

பொதுவாக இயற்கை வேளாண்மை செய்தால் போதிய விளைச்சல் வராது, அதிக காலம் எடுத்துக் கொள்ளும், வருவாய் குறையும் என்ற தவறான எண்ணங்கள் விவசாயிகள் மத்தியில் காணப்படுகின்றன. ஆனால் இவை யாவும் உண்மையல்ல எனவும், ஒரு வருடத்திற்குள் ரசாயன விவசாயத்தை விட நல்ல விளைச்சலை இயற்கை விவசாயத்தின் மூலம் பெற்றோம் என தமிழ்நாடு இயற்கை விவசாய இயக்கத்தின் நிறுவனர் ம ரேவதி தெரிவிக்கின்றார்.

இந்த நிறுவனம் பொய்கைநல்லூர் என்ற கிராமத்தை தத்தெடுத்து அங்கு இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதுவும் சுனாமியால் பாதிக்கப்பட்டு உப்பூறிப் போன பகுதியான அக் கிராமத்தில் நிலத்தின் உயிர்ச்சத்தை பெருக்கினார்கள் அவர்கள். இவர்களது இந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை, இந்தோனேசியாவில் இதை நடைமுறைப்படுத்த அழைப்பு வந்துள்ளது.

இன்று இயற்கை வேளாண் பொருட்களுக்கான சந்தையும் உருவாகத் தொடங்கிவிட்டது. இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வைத் தொடர்ந்து இயற்கை வழியில் விளைந்த காய்கறிகள், பால் பொருட்கள், மசாலா, சோப்பு என பலரும் தேடித் தேடி வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இயற்கை வேளாண் அரிசியைக் கேட்டு வாங்கிச் செல்வதாக ஆர்கானிக் சூப்பர்மார்கெட் நடத்தும் வி விக்னேஷ் கூறுகின்றார்.

மக்கள் தொடர்ந்து ரசாயன வேளாண் பொருட்களை புறக்கணித்து இயற்கை வேளாண் பொருட்களையே வாங்கத் தொடங்கினால் நிச்சயம் தமிழகம் முழுவதும் இயற்கை வேளாண்மைக்கு மாறிவிடும். நம் உடல்நலமும் பேணப்படுவதோடு. தமிழ் மண்ணின் வளமும், நீர் வளமும் போற்றிப் பாதுக்காக்கப் படும். இயற்கை வேளாண்மையின் பெரியார் நம்மாழ்வார் அவர்களின் கனவும் நிச்சயம் பலிக்கும்

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.