அப்துல்கலாம் நினைவிடத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு காவல்துறை தடை

apj

ராமேசுவரம்,தங்கச்சிமடம் பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுப்பு

ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் கடந்த மாதம் 30-ந்தேதி அடக்கம் செய்யப்பட்டது.

அவரது நினைவிடத்தை பார்ப்பதற்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் தினமும் வந்து செல்கின்றனர். ஒரு சிலர் கலாமின் நினைவாக அந்த பகுதியில் மரக்கன்றுகளை நட்டுச்செல்கின்றனர்.

இந்த நிலையில் அப்துல்கலாமின் நினைவிடம் மற்றும் சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு போலீசார் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கலாமின் நினைவிடம் அடைந்துள்ள இடங்களின் அருகே கடைகள் வைக்க கூடாது என்றும், நினைவிடத்தில் வியாபார நோக்கில் யாரும் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது என்றும், இடத்தை முழுமையாக சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்றும், மரக்கன்றுகளை யாரும் நடக்கூடாது என்றும் காவல் துறை மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

அப்துல் கலாம் நினைவிடத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பேய்க்கரும்பு பகுதியில் விரைவில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் அப்துல்கலாமிற்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவரது நினைவிடத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.