பொது அறிவு குறைவாக இருக்கலாம். ஆனால் பொறுப்புணர்வு அதிகம். ஸ்டாலினுக்கு அன்புமணி பதில்

உங்களை விட எனக்கு பொது அறிவு குறைவாக இருக்கலாம்; ஆனால் மக்கள் நலனில் பொறுப்புணர்வு அதிகம் என்று மு.க. ஸ்டாலினுக்கு அன்புமணி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வைத் தவிர அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கு தேவை என வலியுறுத்திய பிறகு, கடைசியாக உங்கள் கட்சித் தலைவர் கலைஞர்,தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன்.

இளைய சமுதாயத்தின் இந்த அவலநிலைக்கும், கலாச்சார சீரழிவுக்கும் முக்கியக் காரணம் கடந்த 44 ஆண்டுகளுக்கு முன் மது விலக்கை கருணாநிதி ரத்து செய்தது தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்று 3 தலைமுறைகள் மதுவுக்கு அடிமையானதற்கும், லட்சக்கணக்கானோர் இறந்ததற்கும், பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகளை உருவானதற்கும், கோடிக்கணக்கான குடும்பங்கள் நிம்மதியை இழந்ததற்கும் காரணம் அதிமுகவும், திமுகவும் தான் என்பது நாடறிந்த உண்மை. இந்த நேரத்தில் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மதுவிலக்கை நடைமுறைப் படுத்தப்போவதாக உங்கள் கட்சித் தலைவர் அறிவித்திருப்பது மக்கள் மீது கொண்டுள்ள உண்மையான அக்கறை காரணமாகவா… அல்லது விரைவில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாகவா? என்ற ஐயம் அனைவர் மனதிலும் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக கடந்த 20 ஆண்டுகளில் 5 முறை வாக்குறுதி அளித்தவர் கலைஞர். இந்த காலத்தில் 10 ஆண்டுகள் கருணாநிதி முதலமைச்சராக இருந்திருக்கிறார். ஆனால், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் ஆறாவது முறையாக மதுவிலக்கு வாக்குறுதியை கருணாநிதி வழங்கியிருக்கிறார்.உங்கள் கட்சி அறிவிப்பு உண்மையானது என்றால் அதற்கான முன்னோட்டமாக தி.மு.க.வினரும், தி.மு.க. ஆதரவாளர்களும் நடத்தும் மது ஆலைகளை உடனடியாக மூடி உங்களின் அக்கறையை நிரூபிக்கலாமே?

முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைத்து மது ஆலைகளும் மூடப்பட்டு விடும் என்ற பொது அறிவு கூட எங்களுக்கு இல்லையா? என நீங்கள் வினா எழுப்பினீர்கள். உங்களை விட எனக்கு பொது அறிவு குறைவாக இருக்கலாம். ஆனால், மதுவிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு அதிகமாக இருக்கிறது. நாங்கள் கேட்டது மது விலக்கை நடைமுறைப்படுத்துவதிலும், மக்கள் நலனைக் காப்பதிலும் நீங்கள் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள்? என்பதை நிரூபிப்பதற்குத் தான். உடனடியாக மது ஆலைகளை மூட முடியாது என அறிவித்திருப்பதன் மூலம் மக்கள் நலனை விட அடுத்த 10 மாதங்களில் உங்கள் கட்சியினருக்கு கிடைக்கவிருக்கும் ரூ.15,000 கோடி வருவாய் தான் முக்கியம் என்பதை வெளிப்படுத்தி விட்டீர்கள்.மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் ஏன் 10 மாதம் காத்திருக்க வேண்டும்? பெரியார் வழியில்…. அண்ணா வழியில் உடனடியாக தி.மு.க. சார்ந்த மது ஆலைகளை மூடவேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.