ரத்ததானம் உயிர்தானம்

blood donate
 விபத்துகள் அதிகரித்துவிட்டன. அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களும் பெருகிவிட்டனர். எனவே மருத்துவ துறையில் ரத்தத்தின் தேவை அதிகரித்துவிட்டது. ரத்ததானம் செய்வது என்பது மிகமிக உன்னதமான உயிர்காக்கும் சேவை. ரத்தம் கொடுப்பதனால் நமக்கு இழப்புகள் ஒன்றும் ஏற்படுவதில்லை. அக்டோபர் 1-ந்தேதி தேசிய ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது.
* ரத்ததானம் செய்வதால் உடல் எடை குறையும், உடல்நலம் பாதிக்கும் என்ற தவறான எண்ணங்கள் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த அச்சம் தேவையற்றது. உண்மையில் ரத்ததானம் செய்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. ஏனெனில் உடலுக்கு பாதிப்பு தராத அதிகப்படியான ரத்தமே தானமாக செய்யப்படுகிறது. தானம் செய்தவுடன் புதுரத்தம் தானாகவே ஊறத் தொடங்கிவிடுவதால் விரைவில் ஈடுகட்டப்பட்டுவிடும்.
* எந்த விதமான நோய் பாதிப்பையும் ஏற்படுத்தாத ரத்தமே பாதுகாப்பான ரத்தம் எனப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான ரத்தமே வழங்கப்படுகிறது. எனவே தானம் செய்பவர்களின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டு பெறப்படுகிறது. இது தானம் கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் பாதுகாப்பை தருகிறது. உயிரைக் காக்கிறது. பாதுகாப்பற்ற ரத்தம் உயிருக்கு கூட உலை வைக்கலாம்.
* மது அருந்தியவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு ரத்ததானம் செய்யக்கூடாது. பால்வினை நோய், மஞ்சள்காமாலை பாதிக்கப்பட்டவர்கள் ஓராண்டு காலமும், காசநோய் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்ற 5 ஆண்டுகள் வரையும் ரத்ததானம் செய்யக்கூடாது. ரத்தம் ஏற்றிக்கொண்டவர்கள் ஓராண்டும், எய்ட்ஸ், இதயநோய், சிறுநீரக நோய், தைராய்டு, வலிப்பு நோய் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் ரத்ததானம் செய்யக்கூடாது.
* பாதுகாப்பற்ற ரத்தத்தின் மூலமாக எச்.ஐ.வி., ஹெப்படிடிஸ் பி, சி வகை மஞ்சள் காமாலை நோய்கள், பால்வினை நோய், மலேரியா நோய்கள் பரவுகின்றன. எனவே சரியான பரிசோதனை இல்லாமல் ரத்ததானம் செய்யவோ, ரத்தம் பெறவோ கூடாது. இதனால்தான் நோய் பாதிப்புள்ளவர்கள் தானம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த ஓட்டம், இதயத்துடிப்பு சரிவர இல்லாததால் அவர்களும் ரத்ததானம் செய்ய முடியாது.
* அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரத்த வங்கிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ரத்ததானம் அளிக்கலாம். அங்கு ரத்ததானம் வழங்குபவர்களுக்கு முதலில் ஆலோசனை வழங்குவார்கள். பிறகு விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டும். எடை, ஹீமோகுளோபின் அளவிடுதல், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு சோதனை, கல்லீரல், நுரையீரல் நிலை ஆகிய பரிசோதனைக்குப் பின் ரத்ததானம் பெற்றுக் கொள்ளப்படும்.
* ரத்ததானம் பெறும்போது ஒருவரிடம் இருந்து 350 மில்லி ரத்தம் எடுக்கப்படும். இது மீண்டும் ஒரு மாதத்தில் உற்பத்தியாகிவிடும். 90 நாட்களுக்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். 30 நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம். சுத்திகரிக்கப்பட்ட உபகரணங்களை பயன்படுத்துவதால் தொற்று நோய் ஏற்படாது. ரத்ததானம் செய்யும்போது வலி ஏற்படாது. ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின் அன்றாட பணிகளை தொடங்கிவிடலாம்.
* ஒருவரின் உயிர் காக்கப்படுவதாலும், நமக்கு அதனால் இழப்பு இல்லை என்பதாலும் ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்யலாம். இந்தியாவில் ஆண்டுக்கு 60 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் பாதி அளவே ரத்தம் கிடைக்கிறது என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ரத்த தேவையை சமாளிக்க முடியாமல் மருத்துவதுறை திணறி வருகிறது. தகுதியானவர்களில் 10 சதவீதம் பேர் தானம் செய்தாலே ரத்த தட்டுப்பாடு வராது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.