கலாம் அப்துல்கலாம்

kalam

பாரத ரத்னா அப்துல் கலாம் நேற்று முன்தினம் இரவு 7.35 மணிக்கு ஷில்லாங்கில் மறைந்த தகவல் உடனடியாக டெல்லியில் உள்ள மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே. சின்கா, உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது.அவர்கள் உடலை டெல்லி கொண்டு வருதல், அஞ்சலி செலுத்துதல், இறுதி சடங்கு போன்றவை குறித்து பிரதமர் மோடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். டெல்லியில் அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்ய முதலில் முடிவு செய்யப்பட்டது.

டெல்லியில் தலைவர்கள் நினைவிடம் அமைந்துள்ள சாந்தி வனத்துக்கும் விஜய் காட்டுக்கும் இடையே காந்தி சமாதி அருகே முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங், முன்னாள் பிரதமர் சந்திரசேகர் நினைவிடத்தை யொட்டி அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்து, நினைவிடம் அமைக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.இதில் அப்துல் கலாமின் உறவினர்கள் விருப்பத்தை கேட்டு முடிவு செய்யுமாறு பிரதமர் மோடி ஆலோசனை தெரிவித்தார்.

அதன்படி உறவினர்கள் விருப்பம் கேட்கப்பட்டது. அப்துல் கலாமின் 99 வயது சகோதரர் டெல்லி சென்று அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளார். மேலும் நெருங்கிய உறவினர்கள் 150 பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் டெல்லிக்கு அழைத்துச் செல்வதும் சிரமம். எனவே சொந்த ஊரிலேயே இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து டெல்லியில் இருந்து மத்திய அரசு அதிகாரிகள் ராமநாதபுரம் கலெக்டருடன் நேரடியாக பேசி ராமேசுவரத்தில் உடல் அடக்கம் செய்யும் இடத்தை தேர்வு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.உடனே மாவட்ட கலெக்டர் நந்தகுமார் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் ராமேசுவரம் விரைந்தனர். அப்துல் கலாம் உறவினர்களை சந்தித்து ஆலோசித்த பின்பு உடல் அடக்கம் செய்யும் இடத்தை தேர்வு செய்தனர்.

ராமேசுவரம் அருகில் உள்ள பேக்கரும்பு, தனுஷ்கோடி சாலையில் உள்ள புது ரோடு, அப்துல் கலாமின் முன்னோர் அடக்கம் செய்யப்பட்டுள்ள காட்டுப்பள்ளி வாசல் ஆகிய இடங்களை பார்வையிட்டனர். இறுதியில் பேக்கரும்பு இடம் தேர்வு செய்யப்பட்டது. ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

இங்கு அரசுக்கு சொந்தமான 1.32 ஏக்கர் நிலம் உள்ளது. இது மண்டபத்தில் இருந்து தங்கச்சிமடத்துக்கும் ராமேசுவரத்துக்கும் இடையே அமைந்துள்ளது. எனவே இங்கு உடல் அடக்கம் செய்து நினைவிடம் கட்ட வசதியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.இதற்கு மத்திய–மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. உறவினர்களும் ஏற்றுக்கொண்டனர்.

அப்துல் கலாம் உடல் இன்று காலை டெல்லியில் இருந்து கிளம்பி விமானத்தில் மதுரை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேசுவரம் சென்றடைந்தது.பிற்பகல் 2 மணிக்கு ராமேசுவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள இழக்காடு மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. இதற்காக அங்கு பிரமாண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இரவு 8 மணிக்கு அப்துல் கலாம் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்படும். நாளை காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து பள்ளி வாசலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெறும். பின்னர் ஊர்வலமாக உடல் அடக்கம் நடைபெறும் பேக்கரும்புக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.அங்கு அடக்கம் செய்யப்படும் இடத்தில் பிரமாண்ட நினைவிடம் கட்டப்படுகிறது. இதற்கான இடத்தை மாநில அரசு வழங்கியுள்ளது. அங்கு நினைவிடம் அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் மறைந்த தலைவர்களுக்கு நினைவிடம் அமைத்திருப்பது போல் இங்கு அப்துல் கலாம் நினைவிடம் அமைக்கப்படுகிறது. அப்துல் கலாம் இயற்கையை மிகவும் நேசிப்பவர் என்பதால் புல்வெளிகள், மரங்களுடன் கூடிய இயற்கை எழிலுடன் நினைவிடம் கட்டப்படுகிறது.

 

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.